தமிழகத்தில் வெப்பம் நீடிக்கும் : வானிலை மையம்

  • 19-Aug-2016
  • 1409 Views


சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில்,
தென் மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் இறுதி வரையாகும். இந்த மாதம் (ஆகஸ்ட்) தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. கடந்த 2 வாரங்களாக தென் மேற்கு பருவமழை குறைந்துவிட்டது. சராசரியை விட 70 முதல் 90 சதவீதம் வரை குறைந்துவிட்டது. ஆங்காங்கே ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது.

மேலும் காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுகிறது. கடல்காற்று தரையை நோக்கி வீசும்போது மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது. தென்னிந்தியாவில் வளி மண்டலத்தின் மேல் இருந்து கீழ் நோக்கி வீசும் காற்று, வழக்கத்தைவிட அதிகமாக வீசுகிறது. இப்படிப்பட்ட காரணங்களால் மழை மேகம் உருவாவதில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் வெப்பம் அதிகமாக உள்ளது. எனவே இப்போதைய கணிப்பின்படி தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Related News