சமூக நீதியையும், நல்லாட்சியையும் அனைவருக்கும் சாத்தியமாக்குவோம்! - பாமக நிறுவனர் மருத்துவர் இ

  • 15-Aug-2024
  • 526 Views


சமூக நீதியையும், நல்லாட்சியையும்
அனைவருக்கும் சாத்தியமாக்குவோம்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா விடுதலை நாள் வாழ்த்து.

இந்தியா அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றதன் 78&ஆம் ஆண்டு விழா நாளை   கொண்டாடப்படும் நிலையில், இந்தியர்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா விடுதலை அடைந்து 77 ஆண்டுகளை கடந்திருப்பது சாதாரணமான ஒன்றல்ல. இந்த நீண்ட பயணத்தில் பல மைல்கற்களை கடந்திருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறோம்; நிலவுக்கு மூன்றாவது முறையாக விண்கலம் அனுப்பியிருக்கிறோம்; போர்ப்படை அணிகளை தலைமையேற்று வழிநடத்தும் வீராங்கனைகளைக் கூட உருவாக்கியிருக்கிறோம்; ஆனால், வறுமையை ஒழித்திருக்கிறோமா? அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறோமா? இவற்றுக்கெல்லாம் இல்லை என்பது தான் நமது பதில் என்றால், நாம் அடைந்த விடுதலைக்கு எந்த அர்த்தமும் இல்லை.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான இரு அம்சங்கள் சமூக நீதியும், சட்டம் & ஒழுங்கும் தான். அந்த இரண்டும் நாம் வாழும் மாநிலத்தில் இல்லை என்பது தான் வேதனையளிக்கும் உண்மை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பகுதியிலும் கொடூரமாக நிகழ்த்தப்படும் கொலைகள் மக்கள் மனதில் அச்சத்தை விதைத்திருக்கின்றன. விலைவாசி உயர்வு ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்திற்கு சென்று விட்டது.

யாருக்கெல்லாம் சமூக நீதி தேவையோ, அவர்கள் அனைவருக்கும் சமூகநீதி வழங்குவது தான் மக்களாட்சியின் மகத்துவம் ஆகும். ஆனால், தமிழக அரசோ உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் கூட  சமூகநீதி வழங்க மறுக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றால், தில்லியை நோக்கி கைகாட்டி விட்டு, தலையை திருப்பிக் கொள்கிறது தமிழக அரசு. தூங்குபவர்களை  எழுப்பலாம்... தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. தமிழகத்தில் சமூகநீதியை நிலை நிறுத்துவதில் ஆட்சியாளர்களின் நிலை தூங்குவது போல நடிப்பவர்களை போன்றதாகவே உள்ளது.

ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி, பல தியாகங்களை செய்து விடுதலை பெற்ற நாம், இப்போது மக்களுக்கு சமூகநீதி வழங்கப்படுவதையும், அச்சமில்லா நல்லாட்சி கிடைப்பதையும் சாத்தியமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக, வறுமையிலிருந்து விடுதலை, அனைவருக்கும் கவுரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம் அமைக்கவும் கடுமையாக உழைப்பதற்கு இந்தியாவின் 78ஆம் விடுதலை நாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

Related News